மோட்டார்சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
கே.வி.குப்பம் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த ரங்கம் பேட்டை, பஜனைக் கோவில் தெருவை சேர்ந்த பிச்சாண்டி மகன் ஆகாஷ் (வயது 22). இவர் காட்பாடியிலிருந்து, ரங்கம்பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பி.என்.பாளையம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரஜினி மகன் அஜித் (வயது 25) என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இரண்டு மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஆகாஷ் தலையில் பலத்த காயங்களுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அரசு மருத்துமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். அஜித் காயங்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து லத்தேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.