ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி; 24 அணிகள் பங்கேற்பு
ஈரோட்டில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. 24 அணிகள் பங்கேற்றன.
ஈரோடு
ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், கிளாடியேட்டர் கிளப் சார்பில் மாநில அளவிலான 7 பேர் கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். ஈரோடு, கோவை, நாமக்கல், சேலம், சென்னை, கன்னியாகுமரி, திருப்பூர், மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடக்கிறது.
போட்டிகள் தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதைத்தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் ஆர்.பி.பி. குழுமத்தின் நிர்வாக இயக்குனர் செல்வ சுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு வழங்குகிறார். முதல் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 ஆயிரமும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரமும், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.7 ஆயிரமும் பரிசு வழங்கப்படுகிறது. மேலும் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு வெற்றி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.