கொரோனா கால ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை
கொரோனா கால ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் தமிழ்நாடு உள்ளாட்சி துறை பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் தவசு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் அறவாழி, மாநில தணிக்கை குழு உறுப்பினர் செல்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை விளக்கி பேசினர். கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமாக கருதி முன்கள பணியாளர்களாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் ஆகியோருக்கு கொரோனா காலத்தில் முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். திருத்தப்பட்ட புதிய ஊதிய உயர்வு அரசாணையின்படி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் விருப்பப்படி ஊதியம் வழங்காமல், தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில பொருளாளர் ஜோதி, தமிழ்நாடு எம்ப்ளாயீஸ் யூனியன் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட பொருளாளர் கெங்காசலம் நன்றி கூறினார்.