வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க 3 லாரிகளில் வந்த 138 டன் கற்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க 3 லாரிகளில் 138 டன் எடை கொண்ட கற்கள் வந்தன. இதன் மூலம் விரைவில் பணி தொடங்க உள்ளது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டபத்தை சீரமைக்க 3 லாரிகளில் 138 டன் எடை கொண்ட கற்கள் வந்தன. இதன் மூலம் விரைவில் பணி தொடங்க உள்ளது.
வீரவசந்தராயர் மண்டபம்
உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் அடைக்கப்பட்ட பிறகு அங்குள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் மேற்கூரைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. எனவே அன்றைய தினத்தில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள், பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் உள்ள கற்கள் உறுதியாக இருப்பது கண்டறிந்து அதனை பயன்படுத்த கோவில் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை அளித்தது. அதை தொடர்ந்து அங்கு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடியும், மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதை தொடர்ந்து அங்கு கடந்தாண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
138 டன் கற்கள்
முதல் கட்டமாக கடந்த ஜூன் மாதம் 3 கற்கள் வெட்டி எடுத்து வரப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வளையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. அதன்பின்னர் கற்களை வெட்டி எடுக்கும் பணி அங்கு தொடர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு 3 லாரிகளில் 138 டன் எடை கொண்ட 3 பெரிய கற்கள் கூடல்செங்குளம் பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன. அந்த கற்களை நேற்று காலை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.
அப்போது மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம், கோவில் என்ஜினீயர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையில் கற்களை தூண்களாக செதுக்கும் பணி திருப்பூர் ஸ்பதி வேல்முருகன் என்பவருக்கு வழங்கி டெண்டர் இறுதி செய்யப்பட்டது. தற்போது கற்களும் வந்து விட்டதால் ஓரிரு நாட்களில் பணிகள் தொடங்க உள்ளதாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வரை 10 கற்கள் தான் வந்துள்ளன. இந்த நிலையில் கற்களை வெட்டி எடுப்பதற்கான டெண்டர் அடுத்தமாதம் முடிவடைகிறது. எனவே மீண்டும் அதற்கான அனுமதி பெற்ற பின்பு தான் கற்களை எடுக்க முடியும்.
ஆதலால் தொடர்ந்து கற்களை வெட்டி எடுப்பதற்கான பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கற்கள் அனைத்தும் வெட்டி எடுத்து வந்த பிறகு தான் மண்டபத்தை சீரமைக்க முடியும்.
எனவே இந்த பணிகளை விரைவுப்படுத்த அரசும், கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.