இரும்பு கம்பி தடுப்பு வேலியில் சிக்கிய காட்டுயானை
குஷால்நகர் அருகே இரும்பு தடுப்பு வேலியில் காட்டு யானை சிக்கிக் கொண்டது.
குடகு:
குடகு மாவட்டம் குஷால் நகர் தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள் வசித்து வருகின்றன. அவைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து காபித்தோட்டங்களை நாசப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதை தடுக்க வனத்துறையினர் ரெயில்வே தண்டவாள கம்பிகளை பயன்படுத்தி வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பகுதிகளை கண்டறிந்து தடுப்பு வேலி அமைத்துள்ளனர். இதனால் காட்டுயானைகள் வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் புகும் சம்பவங்கள் குறைந்திருந்தது.
இந்த நிலையில் நேற்று துபாரே வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டுயானை ரெயில்வே தண்டவாள கம்பி தடுப்பு வேலிக்குள் புகுந்து வெளியேற முயன்றது. ஆனால் அந்த காட்டுயானை சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையின் முன்பு சிறிய அளவில் பள்ளம் தோண்டி அந்த காட்டுயானையை மீட்டனர். பின்னர் அது வனப்பகுதிக்குள் சென்றது.