பூண்டி மாதா பேராலயத்தில் தேர் பவனி
பூண்டி மாதா பேராலயத்தில் நடந்த தேர்பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி:
பூண்டி மாதா பேராலயத்தில் நடந்த தேர்பவனியை கும்பகோணம் பிஷப் தொடங்கி வைத்தார்.
பூண்டி மாதா பேராலயம்
திருக்காட்டுப்பள்ளி அருகே புகழ்மிக்க பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா நடைபெறும். இந்த திருவிழா கடந்த 6-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.
பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு திருவிழா நாளான நேற்று காலை மறைந்த லூர்து சேவியர் அடிகளார், ராயப்பர் அடிகளார் நினைவு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை சிறு சப்பர பவனி நடந்தது.
திருப்பலி
கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் மரியா-விசுவாசத்தின் மாதிரி என்ற தலைப்பில் திருப்பலி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியானமைய இயக்குனர் சாம்சன், உதவி பங்குதந்தையர்கள் ஜான்சன், இனிகோ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தேர்பவனி
பின்னர் அலங்கார தேரில் பூண்டிமாதாவின் சுரூபம் வைக்கப்பட்டு மின்விளக்கு-மலர் அலங்காரத்தில் தேர்பவனி நடைபெற்றது. இந்த தேர்பவனியை கும்பகோணம் பிஷப் அந்தோணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைத்தார். அப்போது வாணவேடிக்கை நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு மாதாவை வணங்கினர்.