கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-14 19:55 GMT
திருவிடைமருதூர்:
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
சாரங்கபாணி கோவில் 
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டில் அமைந்துள்ள வைணவ கோவில்களில் 12-வது தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட திருத்தலமாகவும் விளங்குகிறது. 
மேலும் ஆழ்வார்கள் திவ்யபிரபந்தங்கள் பாடப்பட்ட திருத்தலமாக கும்பகோணம் சாரங்கபாணி கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
சித்திரை தேர் திருவிழா
 
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா சிறப்புடையது. இந்த கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் உள்ள தேர் தமிழகத்தில் உள்ள கோவில் தேர்களிலேயே 3-வது பெரிய தேர் என்ற சிறப்பை  பெற்றது. 
இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். 
இக்கோவிலில் கடந்த 6-ந்தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.  
சாரங்கா, சாரங்கா என கோஷம்
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாரங்கா, சாரங்கா என கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதில் அன்பழகன் எம்.எல்.ஏ., பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் எஸ். கல்யாணசுந்தரம், மாநகர மேயர் சரவணன், துணை மேயர் தமிழழகன், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை  கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு  அசோகன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்