ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு; 4 பேர் கைது
லாலாபேட்டை அருகே ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணராயபுரம்,
ஆட்டோ டிரைவர்
லாலாபேட்டை அருகே உள்ள வடக்கு வேங்காம்பட்டியை சேர்ந்தவர் ராமரெத்தினம் (வயது 31), ஆட்டோ டிரைவர். கடந்த வாரம் அப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில், அதே ஊரை சேர்ந்த தேவராஜ், சிவக்குமார், மாரிமுத்து, மயிலாடியை சேர்ந்த சசிகுமார் ஆகிய 4 பேரும் ஒரு கடையில் தகராறில் ஈடுபட்டனர்.
இதனை கண்ட ராமரெத்தினம் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பிரச்சினையை முடித்து வைத்தனர்.
4 பேர் கைது
இந்தநிலையில் நேற்று ராமரெத்தினம் வேங்காம்பட்டி பிள்ளையார்கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தேவராஜ், சசிகுமார், மாரிமுத்து ஆகியோரிடம் அவரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதில், ஆத்திரம் அடைந்த தேவராஜ், சசிகுமார் ஆகியோர் ராமரெத்தினத்தை அரிவாளால் கை மற்றும் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில், படுகாயம் அடைந்த ராமரெத்தினத்தை அப்பகுதி மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ராமரெத்தினம் கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவாராஜ், சசிகுமார், மாரிமுத்து, சிவக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.