கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2022-05-14 18:13 GMT
கோவில்பட்டி:
வன்னிகோனேந்தலில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். அவருக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் பட்டாசு வெடித்து, பேண்டு வாத்தியம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்,  மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் சீனிராஜ், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ் பாண்டியன், நகர செயலாளர் விஜய ‌பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன்,  காயல் மவுலானா, எட்டயபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டார்கள். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழாவையொட்டி, எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பெருமாள், ஒன்றிய செயலாளர் அன்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடம்பூர் சிதம்பராபுரத்தில் இளையரசனேந்தல் பிர்காவைச் சேர்ந்த 12 பஞ்சாயத்துகளை தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்திலும், கோவில்பட்டி யூனியனுடனும் இணைக்க கோரி, தேசிய விவசாயிகள் சங்கம் மற்றும் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தொடர்ந்து சுமார் 13 ஆண்டுகாலமாக போராடி வந்தன. அரசு தொடர்ந்து இணைக்காமல் தள்ளிப்போடப்பட்டு வருவதால் 12 பஞ்சாயத்து பொதுமக்களும் மிகவும் சிரமமான நிலையில் இருந்து வருகிறார்கள்.
இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம், ஜமீன் தேவர்குளம், அய்யனேரி, வெங்கடாச்சலபுரம், அப்பனேரி, சித்திரம்பட்டி, புளியங்குளம், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய 12 பஞ்சாயத்துகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி 12 பஞ்சாயத்துகள் இணைக்கவேண்டும் என சட்டசபையில் பேசி, விரைவில் நடவடிக்கை எடுத்த கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ரவி நாயுடு, மாநில ஆடு வளர்ப்பு பிரிவு தலைவர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராகுல், கோவில்பட்டி நகர தலைவர் ராமசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்