வேளாண்மைத்துறை சார்பில் பாரம்பரிய இயற்கை அங்காடி கலெக்டர் திவ்யதர்சினி திறந்துவைத்தார்
தர்மபுரி அருகே வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய இயற்கை அங்காடியை கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய இயற்கை அங்காடியை கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்தார்.
பாரம்பரிய அங்காடி
தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் கூட்டு பண்ணைய உழவர் உற்பத்தியாளர் அமைப்பின் பாரம்பரிய இயற்கை அங்காடி தர்மபுரி அருகே பச்சினம்பட்டியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அங்காடியை கலெக்டர் திவ்யதர்சினி திறந்து வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பாாவையிட்டார்.
இந்தப் பாரம்பரிய இயற்கை அங்காடியில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 802 விவசாயிகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய அரிசி ரகங்கள், நாட்டு காய்கறி விதைகள், சிறுதானியங்கள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றி நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சிப்பம் கட்டும் அறை
இதைத்தொடர்ந்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் சார்பில் கடகத்தூர் பகுதியில் மானிய உதவியுடன் ரூ.4 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிப்பம் கட்டும் அறையை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த வசதியை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்தாஸ் சவுமியன், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி, உதவி இயக்குனர் சசிகலா, தாசில்தார் ராஜராஜன், வேளாண்மை விற்பனை குழு செயலாளர் ரவி, வேளாண்மை அலுவலர் அர்ஜூனன், தோட்டக்கலை அலுவலர் அசோக்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.