கோட்டக்குப்பத்தில் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோட்டக்குப்பத்தில் நடந்த கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-14 16:55 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ரஹ்மத்நகர் மரைக்காயர் தோப்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 8-ந் தேதியன்று மரக்காணம் நொச்சிக்குப்பத்தை சேர்ந்த கலைமணி மகன் அபினேஷ் (வயது 22) என்பவர் கொலை செய்யப்பட்டார்.

 இந்த கொலை வழக்கில் புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பாளைவாசல் தெருவை சேர்ந்த பஷீர்முகம்மது மகன் அகமதுஅசேன் (22), வானூர் தாலுகா சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராயர் மகன் அப்பு என்கிற ஜவகர் (21), புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை சோலை நகரை சேர்ந்த கார்த்திக் மகன் தேசமுத்து என்கிற சதீஷ் (20) ஆகிய 3 பேரையும் கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் இவர்கள் 3 பேரும் இதுபோன்று ரவுடியிச செயல்களில் ஈடுபட்டு வருவதோடு இவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் என பல்வேறு வழக்குகள் உள்ளன.


குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

இதையடுத்து இவர்கள் 3 பேரின் இத்தகைய செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். 

அதன்பேரில் அகமதுஅசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

 இதையடுத்து அகமதுஅசேன், அப்பு, தேசமுத்து ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோட்டக்குப்பம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்