மகப்பேறு டாக்டர்களுக்கான பயிற்சி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்ட மகப்பேறு மருத்துவர்கள் சங்கம், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் துறை ஆகியவை சார்பில் மகப்பேறு டாக்டர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை கூட்ட அரங்கில் நடந்த இந்த பயிற்சி முகாமுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ், துணை இயக்குனர் (குடும்பநலம்) பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை நுண்துளை அறுவை சிகிச்சை கூட்டமைப்பின் மாநில நிர்வாகி டாக்டர் மாலாராஜ், கர்ப்பப்பை பிரச்சினைகளை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை அளிப்பது என்பது குறித்து மகப்பேறு டாக்டர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
மேலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தில் நடந்த அறுவை சிகிச்சையை காணொலி காட்சி மூலம் கூட்ட அரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது நுண்துளை அறுவை சிகிச்சை கருவி மூலம் கர்ப்பப்பை கட்டிகள் இருப்பதை கண்டறிந்து எவ்வாறு சிகிச்சை கொடுப்பது, கர்ப்பப்பையை எவ்வாறு அகற்ற வேண்டும். கர்ப்பப்பையில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்பதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று டாக்டர் மாலாராஜ் காணொலி காட்சியை காண்பித்து செயல்முறை விளக்கம் அளித்தார். இந்த பயிற்சி முகாமில் மகப்பேறு மருத்துவர் சங்க தலைவர் அமலாதேவி, செயலாளர் விஜயா, அரசு மற்றும் தனியார் மகப்பேறு டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.