நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் ஆய்வு

வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-05-14 16:32 GMT
வேலூர்

வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், பொருட்கள் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வாணிப கிடங்கில் ஆய்வு

வேலூர் பாகாயத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அலுவலகத்தில் இருந்த மண்டல மேலாளர் ராஜா, துணை மண்டல மேலாளர் விஜயகுமார் ஆகியோரிடம் கிடங்கில் உள்ள அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றின் தரம் குறித்துக் கேட்டறிந்தார்.

மேலும் பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது அரிசி 2,517 டன், கோதுமை 729 டன், சர்க்கரை 260 டன், துவரம் பருப்பு 38 டன், பாமாயில் 20 ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் ரேஷன் கடைகளில் வினியோகிக்க அனுப்பி வைக்கப்பட்ட தரம் குறைந்த 26 டன் ரேஷன் அரிசி திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள்

பின்னர் கலெக்டரிடம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஓய்வு அறை மற்றும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், எனக் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் ஒரு வார காலத்துக்குள் சாலையை சீரமைத்துத் தர வேண்டும். அங்கு விரைந்து பாதாள சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும், என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ், தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்