ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவுக்கு லாரியில் 15 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - டிரைவர் கைது
ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசம்பேட்டை அருகே தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே ஆர்.கே.பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் சேகர் தலைமையில் வருவாய்த்துறையினர் நரசம்பேட்டை பகுதியில் திடீர் ஆய்வு நேற்று செய்தனர்.
அப்போது திருத்தணியில் இருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, அந்த லாரியில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசியை கடத்தி சென்ற சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மனோகர் (வயது 48) என்பவரை விசாரித்தனர். அதில், அரிசியை ஆந்திராவிற்கு கடத்திச் செல்வதாக லாரி டிரைவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, அவரை பிடித்து திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த்துறையினர் பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, போந்தவாக்கம் கிராமத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி சென்ற வேனை நிறுத்தி சோதித்ததில், ஊத்துக்கோட்டைக்கு சுமார் 1.5 டன் எடை கொண்ட 32 மூட்டை ரேஷன் அரிசி கடத்திச் செல்வதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த யுவராஜ் (33) என்பவரை கைது செய்தனர்.