இளம்பெண் பலாத்காரம்: வாலிபர் கைது
திருமணம் செய்வதாக கூறி, பணம் பறித்துவிட்டு இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்களூரு, மே.15-
போதைப்பொருட்கள் கொடுத்து...
தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் பெர்மன்னூர் கிராமத்தில் உள்ள ஹிதாயத் நகர் தொக்கோட்டில் வசித்து வருபவர் ஷான் நவாஸ் (வயது 36). இவருக்கு மூடபித்ரி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் இருவரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு காதலை வளர்த்து வந்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி நவாஸ் அந்த பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் வாங்கி உள்ளார். மேலும், அவர் விடுதியில் அறை எடுத்து அந்த பெண்ணுக்கு போதைப்பொருட்கள் கொடுத்து அந்த பெண்ணை ஆபாசமாக படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இந்த நிலையில் இளம்பெண் தன்னை திருமணம் செய்ய நவாசை கேட்டுக் கொண்டார். ஆனால் நவாஸ் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இளம்பெண் அந்த வாலிபரை சந்தித்து திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
7 நாட்கள் போலீஸ் காவல்
அப்போது அந்த வாலிபர் திருமணம் செய்ய முடியாது என கூறி மிரட்டியுள்ளார். மேலும், அவர்கள் 2 பேரும் தனிமையில் இருக்கும்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை காட்டி அந்த பெண்ணை அடிக்கடி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பெண் பாண்டேஷ்வர் மகளிர் போலீசில் வாலிபர் மீது புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நவாசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும், 7 நாட்கள் காவலில் எடுத்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷான் நவாஸ் மீது போதைப்பொருட்கள் கடத்தல் வழக்குகள் பதிவாகி இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.