கட்டுமான பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன கட்டுமான பணியின்போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலியானார்.

Update: 2022-05-14 15:39 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனத்தின் கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த விஜய் சவுரி (வயது 22) என்பவர் உட்பட 10 பேர் தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜய் சவுரி மற்றும் சக பணியாளர்கள் அந்த தனியார் நிறுவனத்தின் உயரமான இடத்தில் நின்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 40 அடி உயரத்தில் பணி செய்து கொண்டிருந்த விஜய் சவுரி திடீரென கால் தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை கண்ட உடன் பணிபுரிந்து கொண்டு இருந்த சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தண்டலம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்