கொடைக்கானலில் வரதராஜபெருமாள் ஆற்றில் இறங்கும் விழா
கொடைக்கானலில் வரதராஜபெருமாள் ஆற்றில் இறங்கும் விழா நடந்தது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் பெரியமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து இரவில் அம்மன் மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. மேலும் கோவில் வளாகத்தில் நேற்று சங்கரலிங்கேஸ்வரர், கோமதியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இந்த திருவிழாவையொட்டி கொடைக்கானலில் முதன் முறையாக வரதராஜ பெருமாள் ஆற்றில் இறங்கும் விழா இன்று வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி வரதராஜ பெருமாளை பூக்கள் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து பக்தர்கள் கோவிந்தா...கோவிந்தா கோஷம் முழங்க தோளில் சுமந்து ஊர்வலமாக தூக்கி வந்தனர். இந்த ஊர்வலம் மூஞ்சிக்கல், ஆனந்தகிரி 1-வது தெரு, 2-வது தெரு, பெரியகாளியம்மன் கோவில் வழியாக சென்று அரசு விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ஆற்றுக்கு சென்றது. அங்கு வரதராஜபெருமாள் ஆற்றில் இறங்கினார். அப்போது பக்தர்கள் பக்திபரவசத்துடன் வரதராஜரை தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியின்போது சில பக்தர்கள் கருப்பண சுவாமி வேடம் அணிந்து வந்தனர், பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.