பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரசே காரணம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பதற்கு காங்கிரசே காரணம் என சி.டி.ரவி எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

Update: 2022-05-14 15:13 GMT
பெங்களூரு:

பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

  உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் தோ்தல்களில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் குறிக்கோள் மற்றும் நோக்கமாகும். பா.ஜனதாவின் நிலைப்பாடும் அது தான். அதற்காக தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று பா.ஜனதா போராடி வருகிறது. ஆனால் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பதற்கு காங்கிரஸ் கட்சியே காரணமாகும். மராட்டிய மாநிலத்தில் கூட்டணி ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் சரியாக காய் நகர்த்தி, இதனை செய்திருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இதனை மூடி மறைக்க முயற்சிக்கிறார்.

  மராட்டிய மாநில காங்கிரஸ் செய்த தவறினால், தற்போது பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது என்பதை இந்த நேரத்தில் சித்தராமையாவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நாட்டிலேயே முதல் முறையாக அரசியலமைப்பு சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தயாராக இருக்கிறது. இதற்காக ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும், கவுரவம் கொடுக்க வேண்டும்.
  இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

மேலும் செய்திகள்