தேனி-போடி ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரம்

தேனி-போடி ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-14 15:08 GMT
போடி:

தேனி-போடி ரெயில்பாதை

போடி-மதுரை ரெயில்பாதையை, அகல ெரயில் பாதையாக மாற்றும் பணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி முதல் அந்த வழித்தடத்தில் ரெயில்சேவை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மதுரையில் இருந்து தேனி வரை ரெயில்பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனையடுத்து தேனியில் இருந்து போடி வரையிலான 16 கிலோமீட்டர் தூரம் ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியை தேனி கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

 கலெக்டரிடம் கோரிக்கை

அப்போது வெண்ணிமலை தோப்பு சாலையில் ரெயில்பாதை அமைக்கும்போது தங்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என்று போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி, தேவர் காலனி, வெண்ணிமலை, பரமசிவன் கோவில் மலையடிவார பகுதியில் வசிக்கிற மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். 

இதனையடுத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் ரெயில்பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆய்வின்போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ கவுசல்யா, போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

இதேபோல் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களின் வருகை பதிவேட்டை பார்வையிட்டார். 

படுக்கை வசதி, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, சிகிச்சை அளிக்கும் விதம், மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து அவர் கேட்டறிந்தார். முன்னதாக, காமயகவுண்டன்பட்டியில் உள்ள ரேஷன் கடைகள், உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்