கிரிவலப்பாதையில் தங்கியுள்ள போலி சாமியார்களை களையெடுக்க வேண்டும்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள போலி சாமியார்களை களையெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-14 13:04 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள போலி சாமியார்களை களையெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்மிக நகரம்

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்மின்றி இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பல்வேறு ஆசிரமங்கள் உள்ளன. 

இந்த ஆசிரமங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் கிரிவலப்பாதையை சுற்றி அஷ்ட லிங்க கோவில்களும் உள்ளன. இவ்வாறு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலையில் உள்ள கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான சாமியார்கள் தங்கியுள்ளனர். 

இவர்கள் கிரிவலப் பாதை மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அருகே உள்ள மடம், ஆசிரமங்கள், பயணியர் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் தங்கி உள்ளனர். சிலர் கிரிவலப்பாதையில் கூடாரம் போன்று அமைத்து தங்கி உள்ளனர். 

இவர்களுக்கு பக்தர்கள் மற்றும் பல்வேறு ஆசிரமங்கள் மூலம் தினமும்  உணவு, உடை போன்றவை கிடைத்து விடுகின்றன. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து துறவு வாழ்க்கை மேற்கொள்ளும் சாமியார்கள் கிரிவலப்பாதையில் தங்கி தங்கள் காலத்தை கழிக்கின்றனர். 

தினமும் காலை, மாலையில் டீ, 3 வேளை உணவு, மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பக்தர்களால் காவி உடைகள் வழங்கப்படுவதால் பல்வேறு பிரச்சினைகளால் போக வழியின்றி இருப்பவர்களும் கிரிவலப்பாதையில் தஞ்சம் அடைகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கிரிவலப்பாதையில் சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கிரிவலப்பாதை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் கிரிவலப்பாதையில் கஞ்சா வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பரவலாக பேசப்படுகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் கஞ்சா விற்ற சாமியார் ஒருவரை கைது செய்தனர். 

மேலும் பெங்களூருவில் இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாமியார் போன்று காவி உடை அணிந்து சுற்றித்திரிந்தவரை ஒரு ஆசிரமத்தில் வைத்து கர்நாடக போலீசார் கைது செய்தனர். இதனால் சாமியார் போர்வையில் குற்றவாளிகள் யாரேனும் கிரிவலப்பாதையில் பதுங்கி இருக்கலாம் என்று பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்து உள்ளது. 

பக்தர்கள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களுக்கு போட்டோ, கைரேகை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஒரு சிலருக்கு அதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணி கொரோனா காரணத்தினால் முழுமையாக நிறைவு பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. 

கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டால் போலி சாமியார் யார் என்பது எளிதாக கண்டறிய முடியும். சாமியார் போர்வையில் தங்கியிருக்கும் குற்றவாளிகளையும் கண்டறிய போலீசாருக்கு எளித இருக்கும். 

எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாமியார்களை முறையாக கணக்கெடுத்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி போலி சாமியார்களை களையெடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்