ராமநாதபுரம் மாவட்டத்தில் கடன் தருவதாக செயலியை தரவிறக்கம் செய்ததும் செல்போனில் சுயவிவரங்களை எடுத்து பணம் கேட்டு நூதன மோசடி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 15 போலி கடன் செயலிகளை முடக்கி உள்ளனர்.
15 செயலிகளை முடக்கி அதிரடி
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடன் தருவதாக செயலியை தரவிறக்கம் செய்ததும் செல்போனில் சுயவிவரங்களை எடுத்து பணம் கேட்டு நூதன மோசடி அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 15 போலி கடன் செயலிகளை முடக்கி உள்ளனர்.
தரவிறக்கம்
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது செல்போன் மூலமே பண வரிவர்த்தனை மற்றும் கடன் பெறுதல், பணம் செலுத்துதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம். இதுபோன்று பொதுமக்கள் ஆன்லைனில் அவசர தேவைக் காக கடன் வாங்கும் வசதி சுலபமாக இருப்பதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் போலியான கடன் வழங்கும் செயலிகள் தோன்றி மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றன.
இதுபோன்ற போலியான செயலிகளை தரவிறக்கம் செய்யும் போதே நமது செல்போனில் உள்ள அழைப்பு முகவரிகள், படங்கள் உள்ளிட்ட விவரங்களை பெற அனுமதி கோரும். அதனை அனுமதி கொடுத்தால்தான் உள்ளே நுழையமுடியும் வகையில் அந்த செயலி இருக்கும்.
இவ்வாறு அனுமதி கொடுத்து செயலியை தரவிறக்கம் செய்த பின்னர் அடையாள அட்டை, புகைப்படம், ஆதார்கார்டு, பான்கார்டு போன்ற அனைத்து விவரங்களையும் கேட்டு பெற்றுக்கொள்வார்கள். இதன்பின்னர் கடன் தொகையில் 30 முதல் 50 சதவீதம் வரை ஆரம்பத்திலேயே வட்டியாக பிடித்து கொண்டு சொற்ப தொகையை மட்டுமே வங்கியில் வரவு வைப்பார்கள்.
அவதூறு தகவல்
இந்த தொகையை திருப்பி செலுத்திய பின்னரும் மேலும் பணம் கேட்டு மிரட்டும் செயல் அதிகரித்து வருகிறது. அவர்கள் கேட்ட தொகையை செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் செயலி தரவிறக்கம் செய்தபோது கட்டாயப்படுத்தி பெற்றுக்கொண்ட நமது செல்போனில் உள்ள தொடர்பு எண்கள் அனைவருக்கும் கடன் வாங்கிய வரின் புகைப்படம், அடையாள அட்டையை அனுப்பி இவர் ஏமாற்றுக்காரர் மோசடி நபர் என்று அவதூறு தகவல் அனுப்பி மிரட்டுவார்கள்.
இதற்கு பயந்து பணத்தை கட்டாமல் விட்டால் அதனை தொடர்ந்து நமது புகைப்படம் மற்றும் செல்போன் கேலரியில் இருந்து அவர்கள் எடுத்துக்கொள்ளும் படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து கடன் வாங்கியவரின் செல்போனில் உள்ள தொடர்பு எண்கள் அனைவருக்கும் அனுப்பிவிடுகின்றனர்.
மிரட்டல்
இன்னும் சிலர் கடன் வாங்கியவரின் குடும்பத்தினரின் எண்களில் அம்மா, தங்கை, அக்கா என பெயரிட்டு வைத்து உள்ளவர்களின் எண்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என்று சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு சொற்ப தொகையை கடனாக கொடுத்து பல லட்சம் கேட்டு மிரட்டி மேற்கண்டவாறு மோசடி செய்யும் செயலிகள் அதிகரித்து உள்ளன.
இதுபோன்று மோசடி செயலியில் கடன் வாங்கி மானம் போன பலர் ராமநாதபுரம் மாவட்டத்தில் புகார் செய்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு கடந்த 2 வருடத்தில் 25 பேர் இவ்வாறு புகார் செய்து தவித்து வருகின்றனர். இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் சைபர ்கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு பாஸ்கரன் தலை மையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முடக்கம்
இதன் தொடர்ச்சியாக சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெற்றிவேல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து இதுபோன்ற மோசடி செயலிகளை அடையாளம் கண்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து கூகுள் பிளே ஸ்டோர் இணையத்தில் இருந்து இதுவரை 15 மோசடி கடன் செயலிகள் முடக்கம் செய்யப் பட்டு உள்ளது.
இன்னும் 10-க்கும் மேற்பட்ட செயலிகளை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தங்களின் கடன் கோரிக்கை தொடர்பாக நேரடியாக வங்கியை மட்டுமே நேரில் சென்று நாடி பெற வேண்டும் என்றும் எந்த வகையிலும் செல்போன் போன்ற இணைய தளம் மற்றும் செயலி வாயிலாக லோன் பெற முயன்றால் இதுபோன்ற மோசடி நபர்களிடம் நீங்களும் சிக்கி உங்களின் குடும்பத்தினரும் சிக்கிவிடுவார்கள் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு
இதுபோன்று செயலிகள் மூலம் கடன் பெற முயன்று மேற் கண்டவாறு பாதிக்கப்பட்டு இருந்தால் சைபர்கிரைம் போலீசில் தயங்காமல் புகார் செய்ய வேண்டும். மேலும் அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்து பணம் அனுப்பி இருந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் பணபரிவர்த்தனை உடனடியாக நிறுத்தம் செய்யப்பட்டு பணத்தை திரும்பபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாங்கள் மட்டும் விழிப்புணர்வு அடையாமல் தங்களின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களையும் விழிப்படைய செய்வதே மிகப்பெரிய உதவியாகும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.