பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-13 20:05 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியம் கீழக்கோவில் பத்து ஊராட்சியில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்பட்டு வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அதே பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமான பணியையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து அம்மாப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், அம்மாப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அரசு மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தையும், வளம்மீட்பு பூங்காவில் மண்புழு உரம் தயாரிக்கும் பணியையும், வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் ரூ.14½ மதிப்பில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறிவுரை
மேலும் அவர், இந்த பணிகளை எல்லாம் விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை உதவி பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், பாபநாசம் தாசில்தார் மதுசூதன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜன், நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்