மாட்டின் வயிற்றில் 2 கிலோ பிளாஸ்டிக் இருந்ததால் பரபரப்பு
அறந்தாங்கியில் மாட்டின் வயிற்றில் 2 கிலோ பிளாஸ்டிக் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி,
அறந்தாங்கி அருகே மேலப்பட்டியை சேர்ந்தவர் எல்சாம் (வயது 41). இவர் பசுமாடு நேற்று முன்தினம் அப்பகுதியில் மேய்ந்து விட்டு அருகே உள்ள பெரியகண்மாயில் தண்ணீர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த மாடு திடீரென மயங்கி கீழே விழுந்தது. இதையடுத்து கால்நடை டாக்டர் அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாடு பரிதாபமாக இறந்தது. மேலும் விஷம் தின்றதால் அந்த மாடு இறந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதந்ததால் குளத்தில் யாரும் விஷம் கலந்தனரா? என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அந்த மாட்டை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் மாட்டின் வயிற்றில் 2 கிலோ பிளாஸ்டிக் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த மாடு இறந்து இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.