மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கவிழ்ந்தது; முதியவர் பலி

ஆதனக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதியவர் பலியானார். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-05-13 19:10 GMT
ஆதனக்கோட்டை, 
வேன் கவிழ்ந்தது
ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 67). இவர் திருக்கானூர்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல் குப்பையன்பட்டியில் இருந்து வேலைக்கு செல்வதற்கு ஆதனக்கோட்டை வழியாக வளவம்பட்டி அருகே தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 
அப்போது அரியலூர் மாவட்டம் கிளுவஞ்சேரி கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் இளம்பருதி (26) ஓட்டிவந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
முதியவர் பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முதியவர் நடராஜன் பலத்த காயம் அடைந்தார். மேலும், வேனில் பயணம் செய்த கண்ணன் (40), மணிகண்டன் (34) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  நடராஜன் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்