மாவேரிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு
மாவேரிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் ஆய்வு செய்தார்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மாவேரிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் திவ்யதர்சினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் அரூர் பேரூராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிப்பு, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணிகள், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வணிக நிறுவனங்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அபராதம் விதிக்கலாம். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேரும் குப்பைகளை உடனடியாக தரம்பிரித்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இதன்மூலம் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார். இந்த ஆய்வின்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.