ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் மேலும் 4 பேர் கைது
குமரியில், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரியில், ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
களியக்காவிளை அருகே உள்ள குளப்புறம் பாறையடிவிளையை சேர்ந்தவர் ஷிஜி (வயது 41), ஆட்டோ டிரைவர். இவர் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி குளப்புறம் பகுதியில் வைத்து ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக ஷிஜி போலீசில் தகவல் தெரிவித்தால் கொலை சய்யப்பட்டது தெரியவந்தது.
6 பேர் கைது
இதுதொடர்பாக ஒற்றாமரத்தை சேர்ந்த வினு (38), மகேந்திர குமார் (48), காப்புக்காடு ஷிபு (32), செம்மண்விளை சதீஷ் (34), மெதுகும்மல் ஜோஸ் (36) மற்றும் செம்மண்கரை கிளான் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கொலை மிரட்டல், ரேஷன் அரிசி கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனைதொடர்ந்து வினு, மகேந்திரகுமார் ஆகியோரை களியக்காவிைள போலீசார் நேற்று முன்தினம் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைந்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
தொடர்ந்து ஷிபு, சதீஷ், ஜோஸ், கிளான் ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நேற்று ஷிபு, சதீஷ், ஜோஸ் மற்றும் கிளான் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.