ஆவாரங்குப்பம்- திம்மாம்பேட்டை இடையே ரூ.18 கோடியில் மேம்பாலம்
ஆவாரங்குப்பம்- திம்மாம்பேட்டை இடையே ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தொகுதி ஆவாரங்குப்பம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை, நபார்டு, கிராம சாலைகள் திட்டம் சார்பில் ரூ.18 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் ஆவாரங்குப்பம் - திம்மாம்பேட்டை இடையே பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 250 மீட்டர் நீளமும், 10 கண்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் அமைந்தால் சுமார் 15 கிலோமீட்டர் சுற்றி செல்வது தவிர்க்கப்படும்.
தற்போது பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிகளை நேற்று வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பாலாற்றில் உள்ள தண்ணீரை சைக்கிளில் கடந்துசென்ற பள்ளி மாணவிகள், பாலத்தை விரைந்து கட்டித்தருமாறு எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். விரைவாக முடிக்க அனைத்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர்களிடம் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
ஆய்வின் போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாம்ராஜ், கவுன்சிலர் ஆர்.செந்தில்குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் கவுன்சிலர் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி உட்பட பலர் உடனிருந்தனர்.