ராமேசுவரம் தங்கும் விடுதியில் இறந்து கிடந்த மர்ம நபர்
ராமேசுவரம் தங்கும் விடுதியில் மர்ம நபர் இறந்து கிடந்தார். அவர் தற்கொலையா? கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவில் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 50) மற்றும் அவருடன் மற்றொருவரும் கடந்த 11-ந்தேதி முதல் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் தங்கியிருந்த அறையின் கதவு நேற்று காலை வரை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி பொறுப்பாளர் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து அறையின் கதவை திறந்து பார்த்தபோது ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மற்றொருவரை காணவில்லை. இறந்தவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்ததுடன் இறந்துகிடந்த நபர் தற்கொலையா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவருடன் வந்த நபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அறை எடுக்க பாண்டியராஜன் என்று பெயர் குறிப்பிட்டு இருப்பது அது உண்மையான பெயரா அல்லது வேறு யாருடைய பெயரா? என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ராமேசுவரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.