தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.

Update: 2022-05-13 16:58 GMT
தேனி:

தி.மு.க. உட்கட்சி தேர்தலையொட்டி தேனி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட நகர, பேரூர் பகுதிகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக தி.மு.க. செயற்குழு கூட்டம் தேனி என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தேனி வடக்கு மாவட்ட தேர்தல் பிரதிநிதி செல்வராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் முன்னிலை வகித்து, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் வினியோகம், வேட்பு மனு கட்டணம், தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கிப் பேசினார். இந்த கூட்டத்தை தொடர்ந்து வேட்பு மனுக்கள் வினியோகத்தை தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டு நகர அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், பேரூர் அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணைச்செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்களை வாங்கினர். மனுக்களை பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் பிரதிநிதி செல்வராஜிடம் சமர்ப்பித்தனர். 
வேட்பு மனுக்கள் சரிபார்ப்பு பணிகள் முடிந்தபிறகு, போட்டி இருக்கும் நகர, பேரூர் பொறுப்புகளுக்கு கட்சியின் தலைமைக்கழக வழிகாட்டுதல்படி தேர்தல் நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில தலைவர் மூக்கையா, போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், தேனி அல்லிநகரம் நகராட்சி துணைத்தலைவர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்