பல்நோக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் தாமதம்

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கல்லூரி திறக்கப்பட்டும் போதிய வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.

Update: 2022-05-13 16:56 GMT
ராமநாதபுரம்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டிட பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கல்லூரி திறக்கப்பட்டும் போதிய வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது.

ரூ.455 கோடியில்...

ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு ரூ.455 கோடியில் மருத்துவ கல்லூரி கட்டிட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுதவிர மதுரை எய்ம்ஸ் கல்லூரி வகுப்புகளும் 5-வது தளத்தில் நடைபெற்று வருகின்றன. 
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி கட்டிடமும், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவ, மாணவியர் விடுதி கட்டிடமும் கட்டப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் கூடுதல் சிறப்பு வகுப்புகளுக்கான படுக்கை வசதி அறைகள், விரிவுரையாளர்கள் அறை, பிரேத பரிசோதனை அறை, டாக்டர்கள் குடியிருப்பு, பல்நோக்கு மருத்துவ மனை கட்டிடம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றன. 

ஆமை வேகத்தில்...

மருத்துவமனை வளாகத்தில் 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. ஆக மொத்தம் 4 லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான இந்த கட்டிட பணிகள் ஆரம்ப காலத்தில் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது மந்தகதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் கல்லூரி திறக்கப்பட்டும் போதிய வசதிகள் இல்லாத நிலையே தொடர்கிறது. 
இதுகுறித்து விசாரித்தபோது, மருத்துவ கல்லூரி கட்டிடம் யாரும் இல்லாத அமைதியான இடத்தில் இடையூறு இன்றி பணிகள் நடைபெற்றதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பணிகள் முடிந்துவிட்டது. ஆனால், மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் இந்த பணிகள் மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. இந்த கட்டிடபணிகளின் அருகில் 2 கொரோனா வார்டு, ஒரு பிரசவ வார்டு என முக்கிய பகுதிகள் அமைந்துள்ளது.

சொந்த ஊருக்கு சென்ற வடமாநில ெதாழிலாளர்கள்

இதுதவிர பொருட்கள், கனரக வாகனங்களை ஆஸ்பத்திரிக்கு சர்வசாதாரணமாக கொண்டு செல்வதில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. மேலும், கொரோனா கால கட்டத்தில் இங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் 4 மாத காலம் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்களை வேன்கள் மூலம் அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் இந்த தொழிலாளர்கள் ஷெட்டுகள் அமைத்து தங்கியிருந்த இடங்களில் திரவ ஆக்சிஜன் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிலாளர்களை மருத்துவ கல்லூரி கட்டிட வளாகத்தில் தங்க வைத்து தினமும் லாரி, வேன்களை அழைத்து வந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த பல்நோக்கு மருத்துவ கட்டிட பணி 3 கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
முதல்கட்டமாக கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டன. பூச்சு, உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
இந்த பணிகள் முடிவடைந்ததும் மருத்துவ உபகரணங்கள் பொருத்தி தேவையான இணைப்பு வசதிகள் செய்து கொடுக்கும் பணி நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்திற்குள் நிச்சயம் முடித்து ஒப்படைக்கப்படும்.

மேலும் செய்திகள்