மேல்மலையனூரில் பெட்ரோல் பங்க்கில் ரூ.53 லட்சம் கையாடல் மேலாளர் கைது

மேல்மலையனூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரூ.53 லட்சத்தை கையாடல் செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-13 16:44 GMT

விழுப்புரம், 

சென்னை கொளத்தூர் லட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து மகன் அருள்மொழிவர்மன் (வயது 34). இவர் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் வளத்தி செல்லும் சாலையில்  பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு செஞ்சி தாலுகா சண்டிசாட்சி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நாகராஜன் (42) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 26.10.2021 அன்று பெட்ரோல் பங்க் கணக்குகளை அருள்மொழிவர்மன் சரிபார்த்தபோது பொய்யான கணக்கு எழுதி, அதன் மூலம் ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 864-ஐ மேலாளர் நாகராஜன் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.53 லட்சம் கையாடல்

மேலும் பெட்ரோல் பங்க்கில் விற்பனையாகும் பெட்ரோல்- டீசலுக்குரிய பணத்தை வங்கி கணக்கில் 1.4.2020 முதல் 29.10.2021 வரை முழுமையாக செலுத்தாமல் சிறிது, 

சிறிதாக அவரது செலவுக்காக எடுத்த வகையில் ரூ.25 லட்சத்து 94 ஆயிரத்து 872-யும் மற்றும் 1.4.2020 முதல் 31.10.2021 வரை பெட்ரோல் பங்க்கில் இருந்து டீசலை வாடிக்கையாளர்களுக்கு கடனாக கொடுத்த பணத்தில் ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 928-யும் என கடந்த 2 ஆண்டுகளாக மொத்தம் ரூ.53 லட்சத்து 18 ஆயிரத்து 664-ஐ ஏமாற்றி கையாடல் செய்ததும் தெரியவந்தது.


இந்த பணத்தை திருப்பித்தரும்படி நாகராஜனிடம் அருள்மொழிவர்மன் கேட்டதற்கு, மொத்த பணத்தையும் திருப்பி செலுத்தி விடுவதாக கூறியுள்ளார். 

ஆனால் பணத்தை தராமல் நாகராஜன் மற்றும் அவரது தம்பி அறிவழகன் (30) ஆகியோர் சேர்ந்து அருள்மொழிவர்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.


மேலாளர் கைது

இதுகுறித்து அருள்மொழிவர்மன், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் நாகராஜன், அறிவழகன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் செஞ்சியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற நாகராஜனை நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அறிவழகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்