போதையில் உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட்ட பஸ் டிரைவர்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போதையில் டிரைவர் உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட்டார். இதனால் பயணிகள் முகம் சுளித்தனர்.
வேலூர்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் போதையில் டிரைவர் உள்ளாடையுடன் ரகளையில் ஈடுபட்டார். இதனால் பயணிகள் முகம் சுளித்தனர்.
புதிய பஸ் நிலையம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து வெளியூர் பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்தில் இருந்தான் புறப்படுகின்றன. சென்னை, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டுமே புதிய பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் செயல்படும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து செல்கின்றன.
இதனால் அங்கு பயணிகள் நடமாட்டம் குறைவாக இருக்கும். ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியவர்கள் சிலர் பஸ் நிலையத்தின் ஒருபகுதியிலுள்ள கோவிலின் பின்புறம் தங்கி உறங்குகின்றனர்.
வெளிச்சம் குறைவாக இருப்பதால் போதை ஆசாமிகளும் அங்கு சுற்றித்திரிகிறார்கள். இரவு நேரங்களில் சில பஸ்கள் பஸ் நிலையத்துக்குள் உள்ளே வருவது கிடையாது.
போதையில் ரகளை
இந்தநிலையில் வேலூரிலிருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி செல்லும் தனியார் பஸ், பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ் திருத்தணிக்கு புறப்பட தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. இரவு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர், மாற்று டிரைவரிடம் பஸ்சை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்குப் புறப்படாமல், பஸ் நிலையத்துக்குள்ளேயே அமர்ந்து மது குடித்தார்.
பின்னர் அந்த டிரைவர் சட்டை, பேண்ட்டை கழற்றி வைத்துவிட்டு உள்ளாடையுடன் பஸ் நிலையத்துக்குள் சுற்றினார். மேலும் ரகளையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதனால், அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற பெண்களும், முதியவர்களும் அவதிக்குள்ளாகினர். சென்னை பஸ்சுக்காக காத்திருந்த பெண் பயணிகளும் முகம் சுளித்தனர்.
பஸ் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். ஆபாசமாக நடந்து கொள்ளும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.