பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
மந்திரி பதவி வழங்கும் விவகாரத்தில் பா.ஜனதா மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மேலிடம் எடுக்கும் முடிவுக்கு...
கர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கம், மந்திரிசபை மாற்றியமைப்பு குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசித்து வருகிறது. புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், மூத்த மந்திரிகள் நீக்கப்பட உள்ளனர் என்றெல்லாம் தகவல்கள் வருகிறது. என்னுடைய தலைவர்களான எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரி பதவி வழங்கினார்கள். எனக்கு வழங்கப்பட்ட போலீஸ் துறையை இதுவரை திறம்பட நிர்வகித்து வந்துள்ளேன். மந்திரி பதவி வேண்டும் என்று யாருடைய வீட்டுக்கும் நான் சென்றதில்லை.
மந்திரி பதவிக்காக இனியும் யாருடைய வீட்டுக்கும் செல்ல மாட்டேன். எனக்கு மந்திரி பதவி வழங்கினாலும் சரி, மந்திரி பதவி வழங்காவிட்டாலும் சரி பா.ஜனதா கட்சி மேலிடம் எடுக்கும் எந்த விதமான முடிவுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன். டெல்லிக்கு எனது சொந்த காரணங்களுக்காக சென்றேன். டெல்லியில் வைத்து கட்சி மேலிட தலைவர்களையோ, பிற முக்கிய பிரமுகர்களையோ சந்தித்து பேசவில்லை.
நியாயமான விசாரணை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சி.ஐ.டி. போலீசார் நியாயமான முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தொடர்பாக நியமன பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சாந்தகுமாரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் தொடர் விசாரணையின் போது முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் இதுவரை யாரையும் பாதுகாக்க அரசு முயற்சி செய்ததில்லை. இனியும் அதுபோன்று நடக்காது. சி.ஐ.டி. போலீசார் சுதந்திரமாக விசாரணை நடத்தி, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வார்கள்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.