விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
பெங்களூருவில், விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு நாயண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ்(வயது 50). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது உறவினரான ரவிராஜ் என்பவருடன் மைசூருவுக்கு சென்ற சீனிவாஸ், ஒரு ஸ்கூட்டரை வாங்கினார். பின்னர் மைசூருவில் இருந்து பெங்களூருவுக்கு சீனிவாஸ் ஸ்கூட்டரிலும், ரவிராஜ் மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.
கும்பலகோடு அருகே சல்லகட்டா கிராஸ் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த பி.எம்.டி.சி. பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட சீனிவாஸ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கும்பலகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பி.எம்.டி.சி. பஸ் டிரைவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.