காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம்

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

Update: 2022-05-13 14:31 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார். 

15 இடங்களில் மையங்கள்

நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்டது. இங்கு பல்லுயிர் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள், காலி பாட்டில்களை வனப்பகுதியிலும், சாலையோரங்களிலும், விளைநிலங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வீசி செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கப்படுகிறது. 

மேலும் வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள் என 15 இடங்களில் காலி மது பாட்டில்களை சேகரிக்கும் மையம் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் வீசப்பட்டு உள்ள காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாளை முதல்...

இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபாட்டில்களின் மீதும் ‘கூடுதலாக ரூ.10 பெறப்படும்’ என்ற வாசகம் அடங்கிய ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருக்கும். 

அந்த காலி மதுபாட்டில்களை மீண்டும் டாஸ்மாக் கடைகளில் கொடுத்து வாடிக்கையாளர்கள் ரூ.10 பெற்று கொள்ளலாம். எனவே நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்