தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்பு
ஒட்டன்சத்திரத்தில் நடந்த தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு உணவுத்துறை அமைச்சர். அர.சக்கரபாணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மக்களும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று கட்சி பாகுபாடின்றி திட்டங்களை அறிவித்து வருகிறார். முதல்-அமைச்சர் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது ரூ.930 கோடியில் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு செய்த 4 நாட்களில் அதற்கான அரசாணையையும் அவர் வெளியிட்டார். தமிழகத்தில் டெல்லியில் உள்ள மருத்துவமனை போல் தமிழகத்தில் 800 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் புதிதாக 25 முழு நேர, பகுதி நேர ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் விரைவில் சொந்த கட்டிடத்தில் இயங்கும். பொது வினியோக திட்டத்தில் உளுந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என்.சிவா, வேலுச்சாமி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவைத்தலைவா் மோகன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளா்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணி, ஒன்றிய குழுத்தலைவர்கள் அய்யம்மாள், சத்யபுவனா, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பொன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் நன்றி கூறினார்.