தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம்: படகுகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்கள்
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் படகுகளை பழுதுநீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய வலைகளை பின்னும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் படகுகளை பழுதுநீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புதிய வலைகளை பின்னும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தடைக்காலம்
தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதால், மீன்வளம் குறைந்து வருவதாகவும் கருதப்பட்டது. இதனால் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு, இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதியுடன் தடை காலம் நிறைவடைகிறது. இந்த 61 நாட்கள் தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 240 விசைப்படகுகள் உள்ளன.
சீரமைப்பு
இந்த படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர். அதே போன்று மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வலை பின்னும் கூடங்களில் வைத்து மீனவர்கள் சேதம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு அரசு சார்பில் மீன்பிடி தடைக்காலம் நிவாரணம் வழங்கப்படும். ஆனால் இதுவரை தடைக்கால நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து மீனவர் தர்மபிச்சை கூறும் போது, மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை எங்களுக்கு வந்து சேரவில்லை. மேலும் மீனவர்களுக்கு மீனவர் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. மீனவர்களுக்கு ஒரு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை, கட்டுமான தொழிலாளர்களுக்கு நடமாடும் மருத்துவமனை நல வாரியத்தில் இருந்து அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல மீனவர்களுக்கும் நடமாடும் மருத்துவமனை அமைத்துக் கொடுக்க வேண்டும். மீனவர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து 58 வயதுக்கு பிறகு எந்த நிதியுதவியும் கிடைப்பதில்லை. ஆகையால் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கூறினார்.