திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-13 12:52 GMT
மலைக்கோட்டை, மே.14-
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சித்திரை திருவிழா
திருச்சி மலைக்கோட்டையில் பிரசித்தி பெற்ற  தாயுமான சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாளுக்கு பகலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இரவில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு மேல் மேஷ லக்கனத்தில் சுவாமி-அம்பாள் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகினர். பின்னர் 5.40 மணிக்கு தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மை பெரிய தேரிலும், தாயார் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
தேரோட்டம்
தொடர்ந்து காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு சிறிய சப்பரத்தில் முன்னே செல்ல, தொடர்ந்து கோவில் யானை லட்சுமி செல்ல பெரிய தேரையும், சிறிய தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வெகு விமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தின் போது, பக்தர்கள் சிவ சிவா, தாயுமான ஈசா என்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் தேர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே பக்தர்களுக்கு பாலும், குளிர்பானங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. தேர் கீழ ஆண்டாள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் நந்திகோவில்தெரு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக காலை 10.40 மணி அளவில் நிலைக்கு வந்து சேர்ந்தது.
தீர்த்தவாரி
இதையடுத்து பக்தர்கள் தேர் நிலைக்கு முன்பு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி தீபாராதனை செய்து சுவாமி, அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேரில் இருந்து கீழே வந்து கோவில் சென்றடைந்தனர்.
இன்று (சனிக்கிழமை) காலை தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவையொட்டி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரை சுற்றிலும் போலீசார் ஒரு வளையம் போல் கயிற்றை அமைத்து தேரை நகர்த்தி வர ஏற்பாடு செய்திருந்தனர். முதன்முறையாக இந்த தேர் திருவிழாவில் நேற்று முன்தினம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்