தக்காளி காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம்
தக்காளி காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம்
திருப்பூர்
தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
முககவசம் அவசியம்
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணியை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை காரணமாக பொது சுகாதார துறை வல்லுனர்களின் அறிவுரையை பொதுமக்கள் பின்பற்றியதால் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 100-க்கு கீழ் பதிவாகி வருகிறது. ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டும் தொற்று ஏற்பட்டு அதையும் சரி செய்து கட்டுக்குள் வைத்துள்ளோம். திருப்பூர் போன்ற பகுதிகளில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இன்னும் சில மாதங்கள் பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவித்தபடி கண்டிப்பாக பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவது அவசியம். அதுபோல் தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 93.5 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 4 கோடியே 96 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 11 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கி செலுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தி வருவதால் 45 லட்சம் பேர் செலுத்திக்கொள்ள வேண்டும். 2ம் தவணை தடுப்பூசியை 1 கோடியே 29 லட்சம் பேர் செலுத்த வேண்டியுள்ளது.
பதற்றம் அடைய வேண்டாம்
பக்கத்து மாநிலங்களில் தக்காளி காய்ச்சல் போன்ற வதந்திகள் பரவுகிறது. கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் சிறு குழந்தைகளுக்கு சாதாரண நுண்கிருமியால் வரக்கூடிய காய்ச்சல். அந்த பகுதியிலேயே கட்டுக்குள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தக்காளி காய்ச்சல் குறித்து எந்தவித பதற்றமும் அடைய வேண்டாம். தக்காளி காய்ச்சலை பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல், முகத்தில் சிவப்பு தடிமன் ஏற்படுவதால் தக்காளி காய்ச்சல் என்கிறார்கள். பெரும்பாலான சுகாதார வல்லுனர்கள், அடையாளப்படுத்தப்படாத வைரசால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. இது சாதாரணமாகவே குணமடைந்து விடும் என்று கூறியுள்ளனர். ஹேண்ட் புட் அன்ட் மவுத் என்ற வேறு ஒரு வைரசால் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இதுவரை அதுபோன்ற காய்ச்சல் எதுவும் இல்லை. வந்தாலும் கூட பாரசிட்டமால் உள்ளிட்ட சில மருந்துகள் கொடுத்ததும் முழுமையாக குணமடைந்துவிடும்.
தக்காளி காய்ச்சல் கிடையாது
கேரள மாநிலத்தில் அந்த காய்ச்சலால் பதற்றமடையும் நிலை ஒன்றும் இல்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதுவும் தக்காளி காய்ச்சல் கிடையாது. தக்காளி காய்ச்சல் வைரஸ் வேறு. ஹேண்ட் புட் அன்ட் மவுத் வைரசால் வரும் புதிய காய்ச்சல் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் மூலமாக பக்கத்து மாநிலங்களில் ஏற்படும் நோய்களை கண்காணித்து செயல்படுத்தி வருகிறோம். எனவே இந்த காய்ச்சல் குறித்து மக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 67 லட்சம் பேருக்கு வீடி தேடிச்சென்று மருத்துவ வசதி அளிக்கப்பட்டுள்ளது. 26 லட்சத்து 97 ஆயிரம் பேர் ரத்த அழுத்தம், 18 லட்சத்து 62 ஆயிரம் பேர் சர்க்கரை நோய் சிகிச்சை பெற்றுள்ளனர். 1 கோடி பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட அரசு மருத்துவமனை
தமிழகத்தில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அறிவுறுத்தி வருகிறார்கள். ஷவர்மா உணவை தடை செய்யவில்லை. பிரசவத்தின் எண்ணிக்கை, புறநோயாளிகள் வருகை, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்வு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.