புனே ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிபொருள்- ரெயில்வே போலீசார் மீட்டு அழித்தனர்

புனே ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிபொருள் மீட்கப்பட்டது. இதனை ரெயில்வே போலீசார் மீட்டு அழித்தனர்.

Update: 2022-05-13 12:35 GMT
கோப்பு படம்
புனே, 
புனே ரெயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிபொருள் மீட்கப்பட்டது. இதனை ரெயில்வே போலீசார் மீட்டு அழித்தனர்.
கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு
புனே ரெயில் நிலையத்தில் கோடைகால விடுமுறையை யொட்டி பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே போலீசார் உடைமைகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பிளாட்பாரத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை அருகே அங்கு கேட்பாரற்று 3 பைகள் இருந்ததை பயணிகள் கண்டனர். அதில் வெடிகுண்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதி பீதி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பயணிகளை அப்புறப்படுத்தினர்.
வெடிபொருள் அழிப்பு
பின்னர் வெடிகுண்டு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வெடிகுண்டு படை பிரிவு போலீசார் புனே ரெயில் நிலையத்திற்கு வந்தனர். அங்கு கேட்பாரற்று கிடந்த பையை மீட்டு வெளியே கொண்டு சென்றனர். அதில் சோதனை நடத்தியதில் வயர்கள் இணைக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததை கண்டனர். ஆனால் ெஜலட்டின், டெட்னேட்டர்கள் இல்லாததால் வெடிகுண்டு இல்லை என நிரூபணமானது. இதனால் பயணிகள் உள்பட போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
 கேட்பாரற்று கிடந்த பைகளை மீட்ட போலீசார் திறந்தவெளி மைதானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அதனை அழித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிபொருள் நிரப்பிய பைகளை விட்டு சென்ற ஆசாமி யார் எனவும், கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்