தலைவாசல் அருகே ஏணியில் ஏறிச்சென்று பள்ளியின் மேற்கூரையை ஆய்வு செய்த கலெக்டர்

தலைவாசல் அருகே ஏணியில் ஏறிச்சென்று பள்ளியின் மேற்கூரையை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-05-12 22:43 GMT

சேலம், 

மக்கள் திட்ட முகாம்

தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் மக்களின் குறைகளை கேட்ட 13 வார்டுகளுக்கும் அதிகாரிகள் நியமனம் செய்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அதன்பேரில், ஒவ்வொரு வார்டுக்கும் அதிகாரிகள் நேரில் சென்று மக்களுடைய குறைகளை் கேட்டறிந்தனர். இதன் தொடர்ச்சியாக மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரம் கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, தலைவாசல் தாசில்தார் வரதராஜன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தாமரைச்செல்வி, தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட் ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிவிழுந்தான் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசன் வரவேற்று பேசினார்.

முகாமில் 195 பயனாளிகளுக்கு ரூ.3½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார். இதில் மணிவிழுந்தான் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காளியண்ணன் பாலகிருஷ்ணன் ஊராட்சி துணைத்தலைவர் ஜெயலட்சுமி செல்வம் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பல்வேறு துறை அதிகாரிகள், மலைக்கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏணி வைத்து ஏறினார்

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் மணிவிழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட முட்டல் பூமரத்துப்பட்டி மலை கிராமத்தில் மக்களிடம் நேரில் சென்று மக்கள் குறை கேட்டார். குறிப்பாக அவர் விவசாயியின் கூரை வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்தார். தலைவாசல் அருகே முட்டல் மலைக்கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பள்ளியின் மேற்கூரையில் ஏணி வைத்து மேலே சென்று ஏறி சேதமான பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தரவு

மேலும் பள்ளி மேற்கூரையை, சரிசெய்யவும் தரைப்பகுதிக்கு டைல்ஸ் போடவும் தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமனுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்