சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2022-05-12 21:11 GMT
சேலம், 
பரவலாக மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.  மேட்டூரில் நேற்று காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு வரை சாரல் மழையாக நீடித்தது. 
இரவு 7 மணிக்கு மேல் திடீரென கனமழை பெய்தது. சிறிய இடைவெளி விட்டு மீண்டும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 
தேவூர்
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் முதல் சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கட்டிட தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 
மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்யப்பட்ட மண்பானைகள், அகல் விளக்குகள், சாமி சிலைகள் உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை வெயிலில் உலர்த்த முடியாமல் சிரமம் அடைந்தனர். மேலும் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் விவசாய வேலைகள் செய்ய முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். சாலைகள் அனைத்தும் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று காலை 6 மணி முதல் சாரல் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலைகளில், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. 
மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் சுற்றுலா வந்த பயணிகள் சுற்றிப்பார்க்க செல்ல முடியாமல் தாங்கள் தங்கியிருந்த அறைகளிலேயே முடங்கி கிடந்தனர். தொடர் மழை காரணமாக ஏற்காடு பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 
சேலம் நகரிலும் தொடர்ந்து இரவு வரை விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, நெத்திமேடு, பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
மாலையில் மழை பெய்யத்தொடங்கியதால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலைக்கு சென்றவர்கள் மற்றும் கூலி வேலைக்கு சென்றவர்கள் என அனைத்து தரப்பினரும் மழையில் நனைந்தபடி சிரமத்துடன் வீட்டுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்த மழையால் மாநகர் முழுவதும் குளிர்ந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்