உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் 4 கிராமங்களில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் கீழ்க்கண்ட கிராமங்களில் நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-
பெரம்பலூர் தாலுகாவில் சிறுவாச்சூரில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகாவில் வேப்பந்தட்டை (வடக்கு) கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகாவில் வேப்பூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகாவில் கொளக்காநத்தம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.