கிணற்றில் குதித்து புதுப்பெண் தற்கொலை அதிர்ச்சியில் கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார்
திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த கணவனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த புதுப்பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த கணவனும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரியில் படித்த பெண்
திருப்பத்தூரை அடுத்த பெரியகுனிச்சி குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், கூலித்தொழிலாளி. இவரின் மகன் சுதாகர் (வயது 31). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், திருப்பத்தூரை அடுத்த பஞ்சணம்பட்டி பகுதியைச் சேர்ந்த தாய் மாமன் கிருஷ்ணன் என்பவரின் மகள் ஆர்த்தி (20) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்கள் பெரியகுனிச்சி குறவர் காலனியில் வசித்து வந்தனர். புதுப்ெபண் ஆர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
மனைவியை காணவில்லை
வழக்கம்போல் அவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே சுதாகர் பஞ்சணம்பட்டியில் உள்ள தனது மாமியாரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குடும்பத் தகராறு பற்றி பேசினார். பின்னர் இருவரும் தூங்குவதற்காகச் சென்று விட்டனர்.
சுதாகர் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது, ஆர்த்தி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்து ஆர்த்தியை தேடி வந்தார். அப்போது கிராமம் அருகில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ஆர்த்தி பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தற்கொலை
இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து கிராம மக்கள் உதவியோடு விவசாயக்கிணற்றில் இருந்து ஆர்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பத் தகராறால் மனமுடைந்த ஆர்த்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம், எனச் சந்தேகிக்கப்படுகிறது.
மனைவி விவசாயக் கிணற்றில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து கதறி அழுத சுதாகர் மனமுடைந்து சோகத்தில் காணப்பட்டார். அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் நேராக வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.