செவிலியர் பரிதாப சாவு: ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இந்து முன்னணி முற்றுகை போராட்டம்
ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் இந்து முன்னணி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை
செவிலியர் சாவு
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இந்து முன்னணி நகர துணைத்தலைவர். இவருடைய மனைவி முருகலட்சுமி. இவர் நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட முருகலட்சுமி அதே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலன் அளிக்காமல் மூளைச்சாவு அடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 3 நாட்களுக்கு மேலாகியும் அவருடைய உடல் உறுப்பையும் தானம் செய்யவிடாமல் மூளைச்சாவு குறித்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முருகலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக இந்து முன்னணி சார்பில் அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நேரடியாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் செவிலியர் முருகலட்சுமி குடும்பத்தினருக்கு நீதிகேட்டு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் நேற்று மதியம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி டீன் அலுவலகம் முன்பு திரண்டனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேல், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சிவா, மாநகர் மாவட்ட செயலாளர் சுடலை, ராஜசெல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நமச்சிவாயம், சங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அருணாசலம், வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரவேல், கழுகுமலை நகர தலைவர் ராஜா, செயலாளர் அழகு, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் சுப்பையா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடலை வாங்க மறுப்பு
செவிலியர் தினத்தில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் கவனக்குறைவால் செவிலியர் முருகலட்சுமி மரணமடைந்து உள்ளார். இவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறினார்கள்.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், “செவிலியர் முருகலட்சுமிக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அதன் பிறகு மீண்டும் தலை வலி ஏற்பட்டதால் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போதுதான் ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஏற்பட்டுள்ள தவறுகளை டாக்டர்கள் உணர்ந்துள்ளனர். அதை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு முன்பு முருகலட்சுமி மூளை செயலிழந்து உள்ளது. முதலில் சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம். எனவே தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆஸ்பத்திரி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என்றார்.