அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி-கட்டிட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அறந்தாங்கியில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி, கட்டிட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி:
காத்திருப்பு போராட்டம்
அறந்தாங்கி ஒன்றியத்தில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு குமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். அறந்தாங்கி ஒன்றியத்தில் அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் மணல் குவாரி அமைக்க வேண்டும். அறந்தாங்கி ஒன்றியத்தில் தூர்வாரப்படாத ஏரி, குளங்களில் மாட்டு வண்டியில் வண்டல் மண் அல்ல தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
சமைத்து சாப்பிட்டனர்
சிறைபிடித்த மாட்டு வண்டிகளை விடுதலை செய்தும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். மணல் தட்டுப்பாட்டால் வேலையின்றி தவிக்கும் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும்.
அறந்தாங்கி ஒன்றியத்தில் கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த காலதாமதம் ஆனதால் சாலை ஓரத்தில் சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு வந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ் தங்களது கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையில் பேசி முடிவு செய்யப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.