முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னாள் படை வீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், கரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:- கூட்டத்தில் 126 முன்னாள் படை வீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் கலந்துகொண்டனர். மேலும் 32 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றதையொட்டி அம்மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கோரிக்கை மனு மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முன்னாள் படைவீரர் நலன் கொடிநாள் நிதி கடந்த ஆண்டு இலக்கை விட அதிக அளவில் சேகரிக்கப்பட்டது. அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் உங்களுக்கான நிதி சேகரிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் முன்னதாக 9 முன்னாள் படைவீரர்களுக்கு கல்வி உதவித்தொகை, வங்கி கடன் வட்டி மானியம், மாதாந்திர நிதி உதவி, கண் கண்ணாடி நிதி உதவி மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 392 மதிப்பில் வழங்கப்பட்டது.