குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி அக்காள்-தங்கை சாவு

குத்தாலம் அருகே குளத்தில் குளித்து விளையாடியபோது சேற்றில் சிக்கி அக்காள்-தங்கை பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-05-12 17:53 GMT
குத்தாலம்:

அக்காள்-தங்கை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கந்தமங்கலம் பிள்ளையார்கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் ஆந்திராவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு சன்சிகா (வயது 9) சுஜி(8) ஆகிய 2 மகள்கள். 
இவர்களில் கந்தமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் சன்சிகா நான்காம் வகுப்பும், சுஜி மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர்.
சேற்றில் சிக்கி சாவு
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று சன்சிகா மற்றும் சுஜி ஆகிய இருவரும் தங்கள் தோழிகளுடன் அருகே உள்ள ஆயிகுளத்திற்கு குளிக்க சென்றனர். 
அப்போது ஷன்சிகாவும், சுஜியும் குளத்தில், குளித்து விளையாடிக்கொண்டு இருந்தனர். குளத்தில் குறைவாக தண்ணீர் இருந்ததாலும், சேறும், சகதியாகவும் இருந்ததாலும் சேற்றில் சிக்கி அக்காள்-தங்கை இருவரும் பரிதாபமாக இறந்தனர். 
தாய் கதறல்
இதுகுறித்து அக்காள்-தங்கையுடன் சென்ற தோழிகள் உடனடியாக ஓடிச்சென்று சகோதரிகளின் தாயிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து மணிமேகலை அங்கு ஓடிச்சென்று பார்த்தார். 
அப்போது அங்கு தனது மகள்களின் உயிரற்ற உடல்களை பார்த்து அவர் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
சோகம்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து பாலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் சேற்றில் சிக்கி பலியான 2 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தில் 2 குழந்தைகள் குளத்தில் சேற்றில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்