பிளஸ்-1 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை

உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்களுடன் மாணவிகளின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-12 17:49 GMT
உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே களமருதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு  ஆங்கில தேர்வு நடைபெற்றது. அதே பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்தபடி தேர்வு எழுத வந்தனர். 
அப்போது அங்கு பணியில் இருந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வறைக்குள் செல்ல விடாமல் தடுத்தார். மேலும் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது என்றும், அதை அகற்றி வைத்துவிட்டு சீருடையில் தேர்வு எழுதும்படி கூறியுள்ளார்.

ஆசிரியர்களுடன் வாக்குவாதம்

இதையடுத்து 6 மாணவிகளும் தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றிவிட்டு, சீருடையில் தேர்வு எழுதினர். பின்னர் தேர்வு முடிந்ததும் வீட்டுக்கு சென்ற மாணவிகள், நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதை கேட்டு ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் தேர்வு கண்காணிப்பாளருடன் தங்களது மத நம்பிக்கையில் எப்படி தலையிடலாம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டமும் நடத்தினர்.

கண்காணிப்பாளர் இடமாற்றம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, ஆசிரியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மாணவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட சரஸ்வதிவை, உடனடியாக வேறு பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்