கணவரை அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த மனைவி கைது

கணவரை அடித்துக் கொன்று விட்டு உடலை தீவைத்து எரித்த மனைவி கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை மறைத்ததாக அவர்களது மகனையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-12 17:46 GMT
திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கீழமூவர்கரை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 45). மீனவரான இவரது மனைவி வசந்தா(40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 
கணவன்-மனைவி இடைேய அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 
தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
இந்த தகராறு நடந்ததற்கு பின்னர் சக்திவேல் மர்மமான முறையில் பலத்த தீக்காயங்களுடன் வீட்டின் அறையில் இறந்து கிடந்தார். இதனை அறிந்த அக்கம், பக்கத்தினர் வசந்தாவிடம் விசாரித்தனர். 
அப்போது அவர்களிடம் வசந்தா, தன்னிடம் தகராறு செய்து விட்டு தனது கணவர் சக்திவேல் மண்எண்ெணயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
சாவில் சந்தேகம்
கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத அளவுக்கு வசந்தா கூறியதை அக்கம் பக்கத்தினரும் நம்பி விட்டனர். இதனை உண்மை என்று நம்பிய உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் நேற்று சக்திவேலின் உடலை தகனம் செய்ய முடிவு செய்தனர். 
இதனையடுத்து அவரது உடலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று தகனமேடையில் கிடத்தி இறுதி சடங்குகள் செய்தனர். ஆனால் சக்திவேலின் சாவில் சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் இதுகுறித்து சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்கிற்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் தீவிர விசாரணை
இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் உத்தரவின்பேரில், திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நாகரத்தினம் மற்றும் போலீசார் கீழ மூவர்கரையில் உள்ள சுடுகாட்டுக்கு விரைந்து சென்று தகனம் செய்ய தயார் நிலையில் இருந்த சக்திவேலின் உடலை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக, வசந்தா மற்றும் அவரது மகன் ரூபனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்திவேலை அவரது மனைவியே அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தது. இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
அடித்துக்கொன்று உடலை தீவைத்து எரிப்பு
சக்திவேல் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. 
தனது கணவர் தன்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் அவர் மீது வசந்தா மிகுந்த ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதற்கு எப்படியும் ஒரு முடிவு கட்டிவிடுவது என்று அவர் எண்ணி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த வசந்தா தனது கணவர் சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து உள்ளார். பின்னர் இந்த கொலையை மறைப்பதற்காக வீட்டில் இருந்த துணிகளை சக்திவேல் மீது போட்டு மண்எண்ணெயை அவர் மீது ஊற்றி எரித்து உள்ளார்.  பின்னர் சக்திவேல் தற்கொலை செய்து ெகாண்டதாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடி உள்ளார். தீவிர விசாரணையில் மேற்கண்ட உண்மை தகவல்கள் வெளிவந்தது.
மேலும் இந்த கொலையை அவரது மகன் ரூபன்(20) மறைத்ததுடன் எதுவும் தெரியாதது போல தந்தை உடலை தகனம் செய்ய சுடுகாட்டுக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
தாய்-மகன் கைது
இதனைத்தொடர்ந்து சக்திவேலை கொன்று உடலை தீவைத்து எரித்த அவரது மனைவி வசந்தா மற்றும் இந்த கொலை சம்பவத்ைத மறைத்த அவர்களது மகன் ரூபன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்